கட்டுரை

எதிர்க்கட்சியான திமுக! கொஞ்சம் சாதனை; நிறைய சவால்

ஆர்.முத்துகுமார்

எதிர்க்கட்சி அரசியலுக்குப் புகழ்பெற்ற திமுக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. கடந்த 65 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் 89 என்ற உச்சபட்ச எண்ணிக்கையுடன் பலம் கொண்ட எதிர்க்கட்சி உருவாகியிருப்பது இதுவே முதன்முறை.

ஆளுங்கட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்ட, தட்டிக்கேட்க அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

சட்டமன்றத்தின் பிரதான குழுக்களான உரிமைக்குழு, குறைதீர்ப்புக்குழு, அலுவல் ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் திமுகவுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். கவன ஈர்ப்புத் தீர்மானம், ஒத்திவைப்புத் தீர்மானம், வெட்டுத்தீர்மானம், நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று சட்டமன்றம் வழங்கியிருக்கும் உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்தி, ஆளுங்கட்சி என்கிற தேரைச் சரியான பாதையில் செலுத்துவதற்கான அத்தனை உரிமைகளும் தற்போது திமுகவுக்கு வந்திருக்கிறது.

துறைசார்ந்த அனுபவம் வாய்ந்த துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு, மா. சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் இம்முறை சட்டமன்றத்துக்குத் தேர்வாகியிருப்பது திமுகவின் பலம். ஒவ்வொரு துறைக்கும் ஒரு நிழல் அமைச்சரை உருவாக்கி, அவருடைய தலைமையில் ஆர்வமும் அறிவும் நிரம்பிய சட்டமன்ற உறுப்பினர்களை இயங்கச் செய்து, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை நுணுக்கமாகக் கண்காணிப்பதன் மூலம், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக திமுக செயல்படமுடியும். முதலில் கிண்டலும் கேலியும் வரலாம். அதைக் கடந்துபோவது திமுகவுக்குச் சாத்தியமான ஒன்றுதான். இடதுசாரிகளும் இன்னபிற முக்கிய எதிர்க்கட்சிகளும் இல்லாத நிலையில் திமுகவின் மீதான பொறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் மிகுதியாக உள்ளன.

கிடைத்த வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்தப் போகிறது, தனது ஜனநாயகக் கடமையை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது திமுகவை நோக்கி எழுந்திருக்கும் முக்கியமான கேள்விகள். ஆனால் அவற்றைத் தாண்டி திமுகவின் தேர்தல் வெற்றி தோல்விக்குப் பின்னால் இருக்கும் பல கூறுகள் நுணுக்கமாக ஆராயப்படவேண்டியவை.

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. வீரபாண்டி ஆறுமுகம் இருந்த காலத்தில் காத்திரமான வெற்றி அல்லது லேசான தோல்வி என்ற நிலையில் இருந்த திமுக இம்முறை 10 தொகுதிகளை இழந்து படுபாதாளத்துக்குச் சென்றிருக்கிறது. எப்போதும் திமுகவுக்குத் தோள் கொடுக்கும் குறிப்பிட்ட சாதியினரின் ஆதரவு திமுகவிடமிருந்து அதிமுக பக்கம் நகர்ந்திருக்கிறது கண்கூடு. மாவட்ட நிர்வாகிகளின் ஊக்கமற்ற செயல்பாடுகளும் திமுகவின் தோல்வியை உந்தித்தள்ளியிருக்கின்றன.

மேற்கு மாவட்டங்கள் என்பது எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அதிமுகவின் பக்கம்தான். அந்த நிலை  அதிமுக பிரிந்தபோதும்கூட நீடித்தது. ஆனாலும் திமுகவின் மீது லேசான கருணைப் பார்வை மேற்கு மாவட்ட வாக்காளர்களுக்கு உண்டு. ஆனால் இம்முறை கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் திமுகவையும் அதற்குத் துணையாக வந்த காங்கிரஸையும் பெயருக்குச் சில தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, நிர்தாட்சண்யமாக நிராகரித்திருக்கிறார்கள்.

வடக்கு மாவட்டங்கள் எப்போதுமே திமுகவுக்குச் செல்வாக்கானவை. திமுக சந்தித்த முதல் தேர்தல் தொடங்கி அங்கு காத்திரமான வாக்குவங்கியை வைத்திருக்கிறது. படுதோல்வி அடைந்த 2001 தேர்தலிலும் கணிசமான தொகுதிகளை வடமாவட்டங்களே கொடுத்தன. ஆனால் இம்முறை அந்த ஆதரவுத் தளத்தில் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது அதிமுக. திமுகவின் ஹெவிவெயிட்ஸ் என்று சொல்லப்படும் ஆ.ராசா, சிவசங்கர் போன்றோர் கோலோச்சும் பெரம்பலூர், அரியலூரில் நூறுசதவிகிதத் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

அதிமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியின் மீதான அதிருப்தியையும் தாண்டி திமுக வேட்பாளர் தோல்வி அடைந்திருப்பதன் பின்னணியில் பல விஷயங்கள் முன்னணியில் நிற்கின்றன. எதிர்காலத்தில் தன்னுடன் அதிகாரப்போட்டியில் ஈடுபடுவார் என்று மாவட்டச் செயலாளர் கருதும் நபர்களுக்கெல்லாம் ஒன்று வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது அல்லது பலவீனமான தொகுதி தரப்பட்டிருக்கிறது. அதையும்மீறி வெற்றிபெறும் தொகுதியைப் பெற்றிருந்தால் உள்ளடி வேலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

கூட்டணிக் கட்சிகளும் தோல்விக்குக் காரணம் என்று இப்போது சொல்கிறது திமுக தலைமை. ஆனால் விழுப்புரம் உள்ளிட்ட வடமாவட்டத்திலும் தென் மாவட்டங்கள் சிலவற்றிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எல்லாம் வெற்றிக்குக் கொஞ்சமும் வாய்ப்பில்லாதவை என்பதையும் கவனிக்க வேண்டும்.

வெற்றிக்கு வாய்ப்புள்ள தகுதியான வேட்பாளர்கள் கைவசம் இருந்தும், அவர்களுக்குத் தலைமையின் ஒப்புதல் கிடைத்தபிறகும், கடைசிநேரத்தில் “தலைமைக் குடும்பத் தலையீடு” காரணமாக மாற்றப்பட்ட கதைகளும் திமுகவில் நடந்தேறியுள்ளன. மயிலாடுதுறை தொகுதிக்கு மூவலூர் மூர்த்தியே வேட்பாளர் என்று முடிவாகி, கடைசி நேரத்தில் குத்தாலம் அன்பழகன் நிறுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.

திமுகவின் மாவட்ட, நகர நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளும் குறைபாடுகளும் விமரிசனங்களும் இந்தத் தேர்தலில் சரியாகிவிடும், அடுத்த தேர்தலில் அகன்றுவிடும், என்று காலம் தாழ்த்திக் கொண்டே வந்ததன் விளைவே இந்தச் சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்றிருக்கும் தோல்விக்கான பிரதான காரணி.

செயல்படாத பொறுப்பாளர்கள் அனைவர் மீதும் சந்தேக முள்முனையை நகர்த்தி, தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, களைகளை அகற்றி, பயிர் செழிக்க வழிசெய்ய வேண்டியது திமுக தலைமைக்கு முன்னால் இருக்கும் ஆகப்பெரிய சவால்.

தோல்விக்குப் பொறுப்பேற்று தாமாக முன்வந்து ராஜினாமா செய்வதும், அப்படிச் செய்யத் தயங்குவோர் மீது துளியும் தயக்கமின்றி நடவடிக்கை எடுப்பதும்தான் திமுகவின் தேக்கத்தைத் தகர்க்கும் வழி. கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் வெற்றிவசப்பட்டிருக்கும் என்ற மனநிலையில் திமுக தொண்டர்கள் இருக்கும் இந்த நேரம்தான் கட்சியைச் சுத்திகரிக்கச் சரியான தருணம்!

மே, 2016.